சென்னை

அமைச்சர் துரைமுருகன் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

அதிமுக மற்றும் பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததாகும்.  இந்நிலையில் நேற்று அதிமுக அதிகாரபூர்வமாக பாஜகவுடனான கூட்டணி முறிந்தது என அறிவித்தது.  இது அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த ஒன்று தன என்றாலும் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர்  

இன்று சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம், 

”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் காவிரி நீர் விவகாரத்தில் கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெரிந்தவர்கள் உணரவேண்டும்.

உச்சநீதிமன்றம் தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருவதால் அதனை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும்? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அங்குத் தமிழகத்துக்குத் தேவையான 12,500 கன அடி தண்ணீர் வேண்டுமென்று வற்புறுத்துவோம். 

அதிமுக தாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து முடிவு எடுத்துள்ளது. பாஜக அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, நாம் அதைப்பற்றி கருத்து கூற முடியாது. அதிமுக கட்சித் தலைவர்கள் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா?  இருக்கக்கூடாதா என்பதை உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்”

என்று கூறினார்.