ஸ்ரீநகர்: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி மீது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், ஜம்மு நீதிமன்றம் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப் பட்டுள்ளார் . இது உதயநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
கடந்த 2-ம் தேதி (செப்டம்பர்) சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்” என்று பேசினார்.
உதயநிதியின் இந்த பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில், இதுதொடர்பாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் விவாதங்கள் நடைபெற்றன. மேலும், உதயநிதி பேச்சு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மேலும் பல மாநிலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்திம் வழக்கு தொடரப்பட்டடுள்ளது. இதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக ஜம்மு நீதிமன்றத்தில், ஏகம் சனாதன பாரத தளத்தின் உறுப்பினர் அதுல் ரெய்னா உள்ளிட்ட மூன்றுபேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழகிகை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், உதயநிதிமீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. மேலும், ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளரை விசாரணை அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்றும், இதற்காக, உதயநிதி ஸ்டாலின் ஜம்முவில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பல்வேறு நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜம்முவில் தொடரப்பட்ட வழக்கு, கடும் நெருக்கடியை கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.