சென்னை: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுக்கு  எதிராக  தஞ்சையில்  வரும் 27ந்தேதி தேமுதிக  மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடாமல் அழிச்சாட்டியம் செய்து வரும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது.

இருந்தாலும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிடாமல் உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  காவிரி நதிநீரை திறந்துவிடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து செப்டம்ப 27ந்தேதி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீரை திறந்து விடாமல்‌ தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும்‌ கர்நாடக அரசை கண்டித்தும்‌, இதனை கண்டு கொள்ளாமல்‌ வேடிக்கை பார்க்கும்‌ மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்‌ தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌ சார்பில்‌ வருகிற 27.09.2023 (புதன்கிழமை) காலை 9 மணி முதல்‌ மாலை 5 மணி வரை தஞ்சாவூர்‌ பழைய பேருந்து நிலையம்‌, அண்ணா சிலை அருகில்‌ மாபெரும்‌ உண்ணாவிரத போராட்டம்‌ நடைபெற உள்ளது.

கழக பொருளாளர்‌ திருமதி. பிரேமலதா விஜயகாந்த்‌ தலைமையில்‌ நடைபெறும்‌ போராட்டத்தில்‌ கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும்‌ மற்றும்‌ பொதுமக்களும்‌ பெருந்திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.