சென்னை
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே கிருஷ்ணசாமி நீட் தேர்வு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் எந்த ஒரு முடிவையும் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து ஆதரித்து வருகிறார். இந்நிலையில் அவர் நீட் தேர்வு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி,
”நீட் தேர்வில் பூஜ்ஜியத்திற்குக் கீழே மதிப்பெண் வாங்கினாலும் பணம் இருக்கக்கூடியவர்கள் எப்படியாவது பட்டம் இருந்தால் போதும் என்ற அடிப்படையில் அந்த இடங்களை நிரப்பிக் கொள்வார்கள். அப்படிப் பணம் கொடுத்துப் பட்டம் பெற்று வருவார்களால் இந்த நாட்டு மக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்? குறைந்தபட்ச தகுதியற்றவர்களைக் கூட மருத்துவராகலாகுவதன் மூலம் கோடான கோடி மக்களுக்கு நல்ல மருத்துவ வசதியை எப்படி கொடுத்து விட முடியும்?
தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் தரம் நம் கண் முன்னாலேயே இந்த அளவிற்குத் தாழ்த்தப்பட்டதை ஏற்றுக் கொள்ளவோ, தாங்கிக் கொள்ளவோ இயலவில்லை. தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைச் செழிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு தவறான முடிவை மத்திய சுகாதாரத்துறை எடுத்திருக்கக் கூடாது; இது ஒரு வரலாற்றுப் பிழை.”
என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் தீவிர ஆதரவாளரே நீட் தேர்வு குறித்து அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.