வீரபத்திரன் கோவில், லேபாக்ஷி, ஆந்திரா
இந்திய நாட்டில் ஆந்திரா மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லேபாக்ஷி என்ற ஊரில் அமைந்துள்ள ஏழு அதிசயங்களைத் தன்னகத்தே அடக்கியுள்ள கோவில் ஆகும். இது அப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆண்டுவந்த விசயநகர பேரரசால் கட்டப்பட்டதாகும். இவர்களில் கட்டிடக் கலைக்கும், வரைகலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது.
இங்கு காணப்படும் வரைகலையை அடிப்படையாகவைத்தே பல சேலைகளின் வரைகலைகள் உருவாக்கப்படுகின்றன. ராமாயணக்காலத்திற்கு உட்பட்ட கதையின் படி கட்டப்பட்ட கோவிலாக இருந்தாலும் இது ஒரு சிவ தளம் ஆகும். சிவனின் சடாமுடியிலிருந்து பிறந்த வீரபத்திரருக்கு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகிலே பெரிய நந்தியும், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் சிலையும் சிறப்பான உலக புகழ் தோற்றம் கொண்டவையாகும்.
இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பறவையான சடாயு இராமனின் மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது வழிமறித்ததாகவும், அப்போது இராவணன் சடாவுவின் இறக்கையைவெட்டி வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்குவந்த ராமன் சடாயுவின் நிலைகண்டு எழுந்திருக்கும்படி பறவையிடம் சொன்னதாக வரலாறு கூறுகிறது. தெலுங்கில் ,,லே என்றால் எழுந்திரு என்றும், பட்சி என்றால் பறவை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ஊருக்கு லேபட்சி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தல்ம் ஆந்திர மாநிலத்தில் இருந்து கருநாடகம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து 140 கிலோ மீற்றர்கள் தொலைவில் ஆந்திர மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ளது.
இக்கோவில் விசயநகர கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. பல தூண்களுடன் நாட்டிய மண்டமும், கர்ப்பக்கிருகமும் அமைந்துள்ளது. இந்த நாட்டிய மண்டபத்தில் தேவலோக கண்ணியர்களான அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.
இக்கோவிலின் பின்புறம் ஏழு தலையுடம் கூடிய பிரமாண்டமான நாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி தன் தாய் மதிய உணவு சமைப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாறு கூறுகிறது. இதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம் முழுவதிலும் முடியாத நிலையில் உள்ளது.
இக்கோவிலில் சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போதும் நீர் வற்றாமல் இருப்பதைக் காணமுடிகிறது.
இக்கோயிலின் கருவறைச் சுவரிலும், கோயில் மண்டபங்களின் விதானங்களில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிவன் குறித்த ஓவியங்களும், மனுநீதிச் சோழனின் வாழ்க்கையை விளக்கும் வகையில் நீதிவடங்கன் கன்றுக்குட்டியை தேர்காலில் ஏற்றி கொல்லுதல், பசு ஆராய்ச்சி மணியை அடித்தல், சோழன் வந்து விசாரித்தல், சோழன் தன் மகனை தேர்காலில் ஏற்றி கொல்லுதல், சிவபெருமான் நீதிவிடங்கனையும், கன்றுக்குட்டியையும் உயிர்பித்து, சோழனுக்கு ஆசிவழங்குதல் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இக்கோவிலில் அமைந்துள்ளவற்றில் முக்கியப்பகுதியும் வரைகலை படிப்பவர்களின் சொர்க்கபுரியாகத் திகழ்வதுவும் இந்த லதா மண்டபம் ஆகும். இந்தியாவில் தயாராகும் சேலைகளின் ஓரங்களில் வரையப்படும் வரைகலைகள் அனைத்துமே இங்கிருந்துதான் எடுக்கப்பட்டவையாகும். மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள தொங்கும் தூண் மிகவும் பிரமிப்பைக் கொடுப்பதாக உள்ளது. இத்தூண் தரைப்பகுதியைத் தொடாமலேயே தொங்கிய நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.