டில்லி
இன்று மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
நேற்று மக்களவை கூடியவுடன், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைச் சபையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக அர்ஜுன்ராம் மேக்வால் முன்வைத்தார் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது விவாதம் தொடங்கியது. நாடாளுமன்ர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் தரப்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
மிகுந்த காரசார விவாதத்துக்கு பின்னர், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். இதற்கு எதிராக 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தனர். ஆகவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது.
புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையை இம்மசோதா பெறுகிறது. இன்று இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.