டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுமீது உச்சநீதிமன்றம் நாளை (செப் 21) விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 20) கர்நாடக அரசு சார்பில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து கூறிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், 15 நாட்களாக எங்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை என தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் விட மறுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு முரண்டுபிடித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு, மத்தியஅரசு, மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடி வலியுறுத்தியது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டுக்கு தினசரி 5ஆயிரம் கனஅடி நீர் 15 நாள் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, காவிரி ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு, அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறது. அதற்கு முன்னதாக இன்று காலை தில்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில்அ அனைத்துக்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
ஏற்கெனவே காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை நாளை(செப். 21) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு இன்று அவசர மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், மாநில துணைமுதல்வருமான டி.கே.சிவகுமார், “நாங்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறோம். மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மட்டுமே எங்களால் பெற முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு 5000 கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்று CWMA உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களாக எங்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை.இது குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விவாதித்தோம்.எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர். எங்களுக்கு நீதி வழங்க உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.