சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலை.யின் கால நிலை ஆராய்ச்சி மையத்தில், வடகிழக்கு பருவமழை காலத்துக்கான ( அக்டோபர் முதல் டிசம்பர் வரை ) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்ப நிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பைக் கொண்டு நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி, இப்பருவமழைக் காலத்தில், அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கோவையில் 369 மி.மீ, நீலகிரியில் 456 மி.மீ, திருப்பூரில் 287 மி.மீ, ஈரோட்டில் 295 மி.மீ அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.