சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் .

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி  சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதுடன், விஜயலட்சுமி 8 முறை கருகலைத்ததாக கூறப்பட்ட விவகாரம் குறித்து மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சீமானை நேரில் ஆஜராகும்படி 2 முறை போலீஸ் சம்மன் அனுப்பியது. இதையடுத்து,  தான் ஆஜராகும்போது புகார்தாரரும் ஆஜராக வேண்டும் என சீமான் வலியுறுத்தி இருந்தார்.  இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்த விஜயலட்சுமி, நள்ளிரவே காவல்நிலையத்துக்கு சென்று புகாரை வாபஸ் பெற்றார். இது சர்ச்சையைனது. சீமானிடம் பணம் பெற்றுக்கொண்டு புகாரை வாபஸ் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதைத்தொடர்ந்து   நடிகை விஜயலட்சுமி தனது ஊரான பெங்களூருக்குத் திரும்பினார்.  அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னை புகாரை வாபஸ் பெற யாரும் தன்னை மிரட்டவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நெருங்கவே முடியாத அளவுக்குச் சீமான் பவர்புல்லாக இருப்பதாகவும் சீமானிடம் பேசிவிட்டே புகாரை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார்.  அத்துடன் இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாகவே பலரும் கருதினர்.

இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல் விடுத்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாா் தொடா்பாக நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகவுள்ளாா்.