சென்னை
தமிழக அரசு விநாயகர் சிலை குறித்த விதிமுறைகளை வெளியிட்டு அதைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.
அந்த விநாயகர் சிலைகளை 3-ம் நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். வரும் 18 ஆம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சிலை குறித்த வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலைகளை அரசு குறிப்பிட்டுள்ள நீர் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய வழிமுறைகள் பின் வருமாறு :
1. விநாயகர் சிலைகள் களிமண்ணால், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மோகோல் கலப்பின்றி செய்யப்பட வேண்டும்.
2. விநாயகர் சிலையின் ஆபரணங்கள் உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றால் மட்டுமே செய்ய வேண்டும். சிலைகளைப் பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சற்ற ரசாயனமற்ற வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவிர இயற்கை சாயங்களால் மட்டுமே அலங்காரம் மற்றும் ஆடைகள் சிலையில் இருக்க வேண்டும்.
4. மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை மத்திய மாசு கட்டுப்பாடு விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.