காஞ்சிபுரம்: திராவிட மாடல் அரசானது மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாம் கொண்டு வரும் திட்டங்களை இன்று இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன, சிறுமிகளை திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதால், பிற்போக்குவாதிகளுக்கு திராவிட இயக்கத்தின்மீது கோபம் என்றும் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மகளிர் உதவித்தொகை வழங்கும் விழாவில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப பெண்களை குறித்து நெகிழ்ச்சி யுடன் பேசினார். “மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்றால் தலைவர் கலைஞர்தான். அவர் பெயரால் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது மிகமிகப் பொருத்தமானதே!” என கூறினார்.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்றார் பேரறிஞர் அண்ணா. அதேபோல் இன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசியவர், குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றவர், அவர்கள் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதால் திராவிட இயக்கத்தின்மீது போகமாக உள்ளனர்.
கைம்பெண் மறுமணம், பெண் குழந்தை கல்வி என சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியதே திராவிட இயக்கம் என்று கூறிய முதலமைச்சர், ஆண்களைவிட பெண்களே அதிகம் படிக்கின்றனர், அதுவும் நன்றாக படிக்கின்றனர், ஆண்களைவிட உயர்ந்தவர்களாக வளர்ச்சி அடைகின்றனர், இதுதான் திராவிட மாடலின் நோக்கம் என்றார்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் போட்டுத் தந்த பாதையில் செயல்படும் இந்த திராவிட மாடல் அரசானது மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாம் கொண்டு வரும் திட்டங்களை இன்று இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
இந்தியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் போது அங்கு வருகை தரும் அரசியல் தலைவர்களும் – மாநில முதலமைச்சர்கள் நமது அரசு கொண்டு வரும் திட்டங்களைப் பற்றிக் கேட்கிறார்கள். விசாரிக்கிறார்கள். தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த நினைக்கிறார்கள்.
கடந்த வாரம் ஜி20 நாடுகளின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்து வைத்தார்கள். அதில் கலந்து கொண்டேன். அப்போது சில ஒன்றிய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தார்கள். இவை எல்லாம் தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பாராட்டுகள் அல்ல. தமிழ்நாடு அரசுக்கும் – நாட்டு மக்களுக்கும் கிடைத்த பாராட்டுகள் ஆகும்.
பசிப்பிணி போக்கி வருகிறோம். அறிவுப்பசியை தணித்து வருகிறோம். இன்னார் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக் கூடாது என்ற நிலையை மாற்றி – இன்னார் உயர வேண்டும் – இன்னார் உயரக் கூடாது என்ற நிலையை மாற்றி – அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் திராவிட மாடல் ஆட்சி கோடிக்கும் மேற்பட்ட பெண்களூக்கு உரிமைத் தொகை வழங்குவதன் மூலமாக – பெண்களுக்கு சமூக – பொருளாதார – அரசியல் வலிமையை வழங்குகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது ‘என் வாழ்நாளில் மிகப்பெரிய பேறு’ என கருதுகிறேன் என்றவர், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு ரூ.1000, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை விட இத்திட்டம் எனக்கு பெரிதும் மகிழ்வைத் தருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என பொய் பரப்புரைகளையே, தனது உயிர்மூச்சாக வைத்துள்ளவர்கள் அவதூறு பரப்பினர். ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை சரியில்லாத காரணத்தால், இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. மதத்தின் பெயரால், ஆதிக்க வர்க்கங்களின் பெயரால் பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கினர். குழந்தை திருமணங்களை ஆதரித்து பேசும், பிற்போக்கு மனம் கொண்டவர்கள் இன்றும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கம் என்றாலே ஆகாது.
பெரியார் சொன்னபடி ஆண்களை விடவும், பெண்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலைக்கு வந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி, என் அருமைச் சகோதரிகளே! உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது. தொல்லை, இனி இல்லை. வானமே உங்களது எல்லை!”.
இவ்வாறு கூறினார்.