மும்பை: மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் சறுக்கி தனியார் நிறுவன ஜெட் விமானம் பாதியாக உடைந்தது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,பல விமான சேவைகளும் தாமதமாகி வருகின்றன. பெய்து வரும் கனமழை காரணமாக விமான நிலைய ஒடுபாதைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்தவிபத்தில் ஜெட் விமானம் இரண்டாக பிளந்தது. இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விரைந்து, மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது. விபத்தைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேரையும் மீட்டனர். அவர்கள் அனைவரும் காயமுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
டுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. பல விமானங்கள் கிளம்பி செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில், விபத்துக்குள்ளான ஜெட் விமானம், லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் என்றும், இந்த விமானம் கனடாவை சேர்ந்த தனியார் வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கியது என்றும், இந்தியாவில், வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.