சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99% தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் முத்துசாமி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
டாஸ்மாக் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும் பல இடங்களில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வந்தது. இதனால், முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய் வருமானன்ம ஈட்டியதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. மதுபானங்களுக்கு கூடுதல் விலை வாங்கப்படுவது சர்ச்சையானது. கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன், பத்துரூபா பாலாஜி என குடிகாரர்களால் அழைக்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அவர் சிறைக்கு சென்ற நிலையில், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவரது எச்சரிக்கையை டாஸ்மாக் ஊழியர்கள் செவிமடுக்காமல் தொடர்ந்து அதிக விலைக்கே விற்பனை செய்து வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 2 நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
அப்போது டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்,, அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதுடன் , “டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99% தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.