அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாவின் மனைவி ரினிக்கி புயன் சர்மா மோசடியாக பிரதம மந்திரியின் திட்டம் மூலம் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. கௌரவ் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.

மலிவு விலையில் விவசாய நிலங்களை வளைத்துப் போட்ட ரினிக்கி புயன் சர்மா அதை வாங்கிய சில நாட்களிலேயே தொழில் நிறுவனத்துக்கு ஏற்ற இடமாக மாற்றி அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.

தவிர, நில உச்ச வரம்பை மீறி வாங்கப்பட்ட நிலத்தில் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டும் நிறுவனம் ஒன்றை துவக்கப்போவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரதம மந்திரியின் கிஷான் சம்பதா திட்டத்தின் மூலம் ரூ. 10 கோடி மானியமும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களை ஆதாரமாக வெளியிட்டுள்ள கௌரவ் கோகோய், “மோடி ஆட்சியில் உண்மையான விவசாயிகள் ஏன் பலன் பெறவில்லை என்பது இப்போது அனைவருக்கும் புரிகிறது.

முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா மீது கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டு கூறிவந்த பாஜக அவரை அந்தக் கட்சியில் சேர்த்த உடன் வாஷிங்மெஷினில் துவைத்து தூய்மையானவராக ஆக்கி விட்டதா” என்று வெளுத்து வாங்கினார்.

ஹேமந்த் பிஸ்வா மற்றும் அவரது உறவினர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த போதும் மத்திய அரசு இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்காதது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்