சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தாம்பரம் காவல்துறை, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டியது. இதையடுத்து, நிகழ்ச்சியை நடத்திய, ஈவன்ட் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் சென்னை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், அவரது கான்வாயும் சிக்கிக்கொண்டது. மேலும், நிகழ்ச்சியிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில், ஏ.ஆர்.ரகுமான், அவரது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், காவல்துறையினரின் தான்தோன்றிதனத்தை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, இன்று தாம்பரம் காவல்துறை விளக்கம் அளித்தது. அதில், இந்த குளறுபடிகளுக்கு காரணம், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி அமைப்பாளர் என நேரடியாக குற்றம் சாட்டியதுடன், நேற்று ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தது.
இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைத்து விதமான சிரமங்களுக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி முதலில், ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 10ந்தேதி ஞாயிறன்று இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4 மணி ஆகியும் கேட் திறக்கவில்லை என்றும், கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் பல கி.மீ.,க்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு பலரும் நடந்தே சென்றனர்.
ஏற்கனவே நிகழ்ச்சிக்கு பிளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த டிக்கெட் என்றே சரிபார்க்காமல் வந்தவர்களை உள்ளே அனுப்பியதாக புகார் எழுந்தது. இதனால் உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை.
பலரும், ரூ. 20ஆயிரம், ர. 10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ‘ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கினோம். எல்லாம் போச்சு’ என புலம்பி தீர்த்தனர். இதனால் ஆவேசத்தில் ‘எங்களுக்கு இசை நிகழ்ச்சியே தேவையில்லை’ என சிலர் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து விட்டு வீடு திரும்பினர்.
ஏஆர் ரகுமானும், நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தி வசூலித்துகொண்டதுடன், முறையான ஏற்பாடுகளை செய்யாததும், இந்த நிகழ்ச்சியை கண்காணிக்க தவறியதாக தமிழ்நாடு காவல்துறையினரையும் ரசிகர்கள் கடுமையாக வசை பாடினர்.
இதற்கிடையில், கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மதியம் 2 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சாலையின் இருபுறம் நின்று சரிசெய்தாலும் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் முதல்வரின் வாகனமும் சிக்கிக்கொண்டது மேலும் பிரச்சினையை பெரிதாக்கியது.
இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகள் குறித்து முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் அடிப்படையில் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பல்வேறு குளறுபடிகளை செய்ததாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாம்பரம் காவல்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தேவைக்கு ஏற்ப செய்யவில்லை எனவும், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக, எழுந்துள்ள புகார் குறித்தும் விசாரணை செய்யப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா இசை நிகழ்ச்சி’ ரசிகர்கள் மனதில் மறக்காத ரணத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.