காரைக்குடி

னாதனம் குறித்த கருத்துக்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ப சிதம்பரம் விளக்கி உள்ளார்.

காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது  ப சிதம்பரம்,

”அனைத்து மொழிகளுக்கும் பேசுதல். மற்றும் புரிதல் என இரு பக்கங்கள் உண்டு.  தமிழகத்தில் சனாதன தர்மம் என்றால் சாதி ஆதிக்கம், பெண் இழிவு என்பதாகவே 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. வடநாட்டில் சனாதன தர்மம் என்றால் இந்து மதம் என்று நம்பப்படுகிறது.

எனவே இவ்விஷயத்தில் பேசியது ஒரு பொருளில், புரிந்து கொண்டது மற்றொரு பொருளில். ஆகவே இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தலையிட விரும்பவில்லை. ஏனெனில் எம்மதமும் சம்மதம் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு.

டில்லியில் நடக்கும் ஜி-20 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்திற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அழைப்பில்லை. எந்த ஜனநாயக நாட்டிலும் இது போல நிகழ்வு நடைபெறாது.

இது ஜனநாயகமே இல்லாத நாட்டிலும், எதிர்க்கட்சிகளே இல்லாத நாட்டிலும் மட்டுமே சாத்தியம். இந்தியாவுக்கு வருங்காலத்தில் இந்தநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, அரசியல் சாசனத்தில் அவ்வளவு எளிதாக மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று தோன்றவில்லை. பாஜகவினர் மாநில அரசுகளை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையினை பலவீனப்படுத்தவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர் என்ற நோக்கத்தில் பயணிக்க முயல்கின்றனர்.”

என்று கூறினார்.