சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகையில், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான தான் நாம் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். கல்விக்காக அவர் ஆற்றிய பங்களிப்பும், ஆசிரியர் பணிக்கான அவரது அர்ப்பணிப்பையும் பார் போற்றும் வகையில் அறியப்படுத்த வேண்டுமென அரசின் முயற்சியால் அவர் பிறந்த தினமான இன்று (செப். 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வளமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளம் சமுதாயத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள அசிரியர்களை இந்நாளில் வாழ்த்துவது ஒவ்வொருவரின் கடமை.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.