சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதியின் தலையை சீவ வேண்டும் என கூறிய வடமாநில சாமியாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி, “என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப் போதும்” என தெரிவித்துள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இதற்க நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறவில்லை, அதில் உள்ள முரண்பாடுகள்தான் ஒழிக்கப்பட வேண்டும் என்று பல்டி அடித்துள்ளார்.
உதயநிதியின் சனாதனத்தை பற்றி அவதூறாக பேச்சு குறித்து பல இடங்களில் புகார்கள் பதியப்பட்டு உள்ளன. இதற்கிடையில், உதயநிதியின் தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி சன்மானம் என அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்துள்ளார். அத்துடன் உதயநிதியின் புகைப்படத்தை குத்திக் கிழித்து, அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியாவால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு பதில் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், , “ ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்துள்ளார். என் தலை மீது உங்களுக்கு என்ன ஆசை? ஒரு சாமியாரிடம் எப்படி ரூ.10 கோடி இருக்கும்? அப்ப அந்த சாமியார் உண்மையான சாமியாரா? இல்ல போலி சாமியாரா? என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப் போதும். சீப்பை கொடுத்தால் நானே சீவிப்பேன். இதே மாதிரி ஒரு சாமியார் கலைஞரையும் மிரட்டினார். கலைஞர் தலையை சீவி கொண்டுவருவோருக்கு ரூ.1 கோடி எனக் கூறினார். இதற்கு கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? நீங்கள் 100 கோடி ரூபாய் கொடுத்தால் என் தலையை என்னாலேயே சீவ முடியாது என பதிலடி கொடுத்தார்.
அம்பேத்கர், பெரியார், கலைஞர், அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகிய அனைவரும் சனாதன கொள்கையை ஒழிக்கவே போராடிவருகின்றனர். சனாதனம் என்றால் என்ன? நான் பேசியதை திசை திருப்புகின்றனர். எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது. யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதுதான் சனாதனம். 100 வருடத்துக்கு முன் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது, 70 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மேலாடை அணியக் கூடாது, படிக்க கூடாது இதையெல்லாம் உடைத்தது திராவிட முன்னேற்ற கழகம். சமூக நீதி. அதைதான் நான் பேசினேன். திமுகவை இந்து விரோத கட்சி என சொல்கின்றனர்” என்றார்.