வாஷிங்டன்
இந்திய வம்சாவளியினரும் புகழ்பெற்ற குறுக்கெழுத்து போட்டியாளருமான மங்கேஷ் கோக்ரேவுக்கு அமெரிக்காவின் ஐன்ஸ்டீன் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் அமெரிக்க விசா மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு விசாக்கள் அளிக்கப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் விசா நேர்காணலைச் சரியாகச் செய்வதில்லை என்பதாகும். இந்நிலையில் நவி மும்பையை சேர்ந்த மங்கேஷ் கோக்ரேவுக்கு அமெரிக்காவின் ஐன்ஸ்டீன் விசா வழங்கப்பட்டுள்ளது
ஐன்ஸ்டீன் விசா பொதுவாக இ பி 1 விசா என அழைக்கப்படுகிறது. இதன் முழு பெயர் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசா என்பதாகும். இந்த விசாவை அவ்வளவு எளிதில் பெற முடியாது என்பதும் விஞ்ஞானம், கலை, கல்வித்துறை’, வர்த்தகம் மற்றும் விளையாட்டுத் துறையில் புகழ் பெற்றவர்கள் மட்டுமே இந்த விசாவைப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
நவி மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினரான மங்கேஷ் கோக்ரே குறுக்கெழுத்து போட்டிகளை உருவாக்குவதில் தலை சிறந்தவர் ஆவார். முதலீட்டு வங்கியாளராக பணி புரியும் மங்கேஷ் உருவாக்கிய குறுக்கெழுத்து போட்டிகள் உலகெங்கும் உள்ள பல செய்தித் தாள்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கச் செய்தித் தாள்களான நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்டவற்றில் மங்கேஷின் குறுக்கெழுத்து போட்டிகளுக்குத் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் இவர் தாஜ்மகாலின் உருவப்படத்தின் அடிப்படையில் உருவாக்கிய குறுக்கெழுத்து போட்டி உல்க அளவில் மிகவும் புகழ் பெற்றுள்ளது. இவருக்கு ஐன்ஸ்டீன் விசா வழங்கப்பட்டுள்ளது இவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.