டில்லி
நேற்று டில்லி சிபிஐ நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,
”பிரான்சில் செயின்ட் ட்ரூப்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 18 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளைக் காண அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இத்துடன் இங்கிலாந்தில் தங்கிப் பணி புரிந்து வரும் தனது மகளைச் சந்திக்க வேண்டும். எனவே இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்”
எனக் கோரியிருந்தார்.
டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் மனுவை விசாரித்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் மனுவ்க்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன என வாதிட்டனர். நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்தார்.
நீதிபதி தனது விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் ரூ.1 கோடி வைப்புத்தொகை அல்லது வரவோலையாகச் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் மேற்கொள்ளப் பயண விவரங்களையும், தங்கும் ஓட்டல்கள், தொடர்பு எண்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதித்து, அவர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செப்டம்பர் 17 முதல் 25 வரை செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.