சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலி அமைப்பு ஆதரவாளரான தலைமறைவு குற்றவாளி லிங்கம் என்ற ஆதிலிங்கம் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த 2021ல், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, விழிஞ்ஞம் கடற்பகுதியில் மர்ம படகு ஒன்றை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். அவற்றில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ ெஹராயின், ‘ஏகே 47’ ரக துப்பாக்கிகள் ஐந்து; 9 எம்.எம்., ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும், 1,000 தோட்டாக்கள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்து, படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். விசாரணையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க, பாகிஸ்தானில் இருந்து ஈரான் மற்றும் கேரளா வழியாக, இலங்கைக்கு போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு மூளையாக லிங்கம் என்பவர் இருந்தது தெரிய வந்தது. மேலும், தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் குணசேகரன், புஷ்பராஜா எனும் பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின் உள்ளிட்டோர் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், திருச்சி முகாமில் பலமுறை சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி சென்னை, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 58 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க், 2 லேப்டேப், 8 வைபை மோடம்கள், வெளிநாடுகளுக்கு ரொக்க பணம் பரிவர்த்தனை செய்த ஆவணங்கள், 1 இலங்கை பாஸ்போர்ட், ரூ.80 லட்சம் பணம், 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்திய வழக்கு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தாக 10 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த சற்குணம், குணசேகரன் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும் விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவில் பணிபுரிந்த சற்குணம் எனும் சபேசன், 47, இருப்பதும், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குணசேகரன், சபேசன் உட்பட, 13 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றவாளியான ஆதிலிங்கம் என்பவர் சென்னை சேலையூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த அதிகாரிகள், கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆதிலிங்கம் என்பவரை கைது செய்தனர்
இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சேலையூரில் தங்கி இருந்த ஆதிலிங்கம், இலங்கை மற்றும் இந்தியாவில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்; சக்தி வாய்ந்த ஆயுத வியாபாரமும் செய்து வந்துள்ளார். குணசேகரனின் பினாமியாக செயல்பட்ட இவர், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில், இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து தங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பலருக்கும், லிங்கம் தான் பாதுகாவலர். மோசடியாக ஆவணங்கள் தயார் செய்து கொடுத்து, அவர்களை இந்தியர்களாக வலம் வரச் செய்தவர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர், இந்தியா வழியாக போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்த, ஆதிலிங்கம், குணசேகரன் உள்ளிட்டோர் உதவி செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வந்த போதைப் பொருட்கள், இந்தியாவில் இருந்து இலங்கை வாயிலாக, ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், இவர்களைப் போலவே செயல்பட்ட ஜலன் என்பவர், ஓமனுக்குத் தப்பி ஓடினார். அங்கு அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.