நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அனுப்பிய சந்திரயான் -3 விண்கலனில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது.
6:04 மணிக்கு நடைபெற உள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை அனைவரும் கண்டு களிக்க மாலை 5:20 மணியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.
சந்திரயான் – 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், தற்போது, நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.
நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விக்ரம் லேண்டர் கலனில் இருந்து பிரக்யான் ரோவர் கருவி மூலம் நிலவின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளை அடுத்து நான்காவது நாடாக நிலவில் கால்பதிக்க உள்ளது இந்தியா. அதேவேளையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடாக இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் நேரடி ஒளிபரப்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் இஸ்ரோ வின் https://isro.gov.in இணையதளத்திலும் மாலை 5:20 முதல் நேரலையில் காணலாம்.