பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக்கொள்கை 2021ம் ஆண்டு முதல் அமலில் உள்ள நிலையில், அதை ரத்து செய்வோம் என கர்நாடக காங்கிரஸ் மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு, நாடு முழுவதும் ஒரேமாதிரியான கல்வியை போதிக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. “புதிய கல்விக்கொள்கை தற்போது தாய் மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சமஸ்கிருதம் போன்ற பண்டைக்கால இந்திய மொழிகளுக்கு புத்துயிரூட்டப்பட்டு வருகிறது. இந்திய உயர்க்கல்வியை சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதோடு, அதனை 21-ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான்” என்று பிதெரிவித்துள்ளார்.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம், மாநில மொழிக்கொள்கை உருவாக்கி அமல்படுத்துவோம் என கூறி வருகின்றன. தமிழ்நாடு அரசும் இதுதொடர்பாக மாநில கல்விக்கொள்கையை வகுத்து வருகிறது.
தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2021ம் ஆண்டு, முதல்மாநிலமாக கர்நாடக மாநில அரசு அமல்படுத்தியது. அப்போது, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்ததால், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர்- டி.கே.சிவக்குமார், “கர்நாடக அரசு துணைவேந்தர்கள் மற்றும் எங்கள் அதிகாரிகள் உட்பட பல்வேறு கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. NEP (தேசிய கல்விக் கொள்கை) 2021 இல் கொண்டு வரப்பட்டது, ஆனால், இதை பாஜக ஆளும் மாநிலங்கள் பல ஆர்வம் காட்டவில்லை.
மேலும், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் NEPயை நிராகரித்துவிட்டன, அதனால் இதுதொடர்பாக அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, கர்நாடக மாநிலத்தில் தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய உள்ளோம், அடுத்த ஆண்டு முதல் எங்கள் (மாநில) கல்விக் கொள்கையை கொண்டு வருவோம், அதற்காக ஒரு வாரத்திற்குள் ஒரு குழுவை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.