சென்னை

மிழக ஆளுநர் தமது பதவியிலிருந்து விலகித் தேர்தலில் போட்டியிடத் தயாரா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலை 9 மணி முதல் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர், –

“தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் 21 உயிர்களை இழந்துள்ளோம். இந்த உயிரிழப்பிற்கு மத்திய அரசும் அதிமுகவும் தான் காரணம். நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் நீட்டால் உயிரிழந்தவர்களின் அண்ணனாக பங்கேற்றுள்ளேன். எனது அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை என்றுதான் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.

ஆளுநர் வெறும் தபால்காரர், ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவருக்குத் தமிழக மக்களைப் பற்றித் தெரியாது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் தேர்தலில் நிற்க அவர் தயாரா?  ஆளுநர் ரவியை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாதா?

தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. பாஜக, அதிமுகவை மக்கள்  மன்னிக்கமாட்டார்கள். தமிழகத்தில் மாணவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும்.  நீட் என்பது  தகுதியற்ற தேர்வு, அதை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடியல். உண்ணாவிரதம் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. டில்லியில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப் படும்.

டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இணைந்து போராட்டம் நடத்த அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கிறேன். எங்களுடன் அதிமுகவினர் வந்தால் பிரதமர் வீட்டிற்கு முன்பு அமர்ந்து நீட்டுக்கு எதிராகப் போராடுவோம். நாம் ஒன்றாக போராடி நீட் தேர்வு ரத்தானால் அந்த வெற்றியை அதிமுகவே வைத்துக் கொள்ளட்டும்.”

என்று கூறி உள்ளார்.