பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து இந்தியா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க தவறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி குறித்தும் முன்னாள் பிரதமர்கள் குறித்தும் விமர்சனம் செய்வது அற்பத்தனமானது.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் அங்கம் துடித்தது போல் இந்திய மக்கள் அனைவரின் அங்கமும் துடித்த போதும் இதுகுறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதமும் அவரது உடல் மொழியும் மக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது என்று கார்கே கூறினார்.
சதீஷ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கார்கே ஜன்ஜ்கிர் – சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பாகிஸ்தானுடனான போரில் 1,00,000 ராணுவ வீரர்களை கைது செய்ததுடன் பங்களாதேஷ் என்ற தனி நாட்டையும் உருவாக்கினார் இந்திரா காந்தி. அது காங்கிரஸ் கட்சியின் பலம் ஆனால், பாஜக-வால் ஒரு குருவியையோ அல்லது எலியை கூட வேட்டையாட முடியாது என்று காட்டமாக கூறினார்.
1966ம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் சொந்த மக்கள் மீதே ராணுவ விமானங்கள் குண்டு வீசியதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியதை அடுத்து, சொந்த மக்களை கொலை செய்ததாக இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாக பிரதமர் பேசியதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெஹரா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திரா காந்தி குறித்து பேச தகுதியற்றது பாஜக என்று கார்கே கூறியுள்ளார்.