பெங்களூரு

பெங்களூருவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மனோஜ்(வயது 32),  கிரண்(35), சீனிவாஸ்(37), சிராஜ்(29), ஸ்ரீதர்(38), சிவக்குமார்(40), சந்தோஷ் குமார்(47), விஜயமாலா(27), ஜோதி(21) ஆகிய 9 பேருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயம் அடைந்தவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.  அல்சூர்கேட் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆய்வகத்திலிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது.  தீவிபத்து தொடர்பாக மாநகராட்சி பொறியாளர்களான ஆனந்த், சுவாமி மற்றும் ஊழியர் சுரேஷ் ஆகியோரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின்போது, அந்த பகுதியில் இவர்கள் தான் இருந்ததாகக் காவல்துறையால் கூறப்படுகிறது.

பெங்களூரூ  மாநகராட்சி கட்டிடத்தில் நடைபெற்ற தீவிபத்துக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி கட்டிடத்தில் தான் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தற்போது எழுந்துள்ள கமிஷன் போன்ற முறைகேடு புகார்களை விசாரிக்கத் தேவையான ஆவணங்களும் அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே முறைகேடு விவகாரத்தில் ஆவணங்களை அழிக்க முயன்றதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றன.

மருத்துவமனை  மருத்துவர்கள்,

 ‘ரசாயன வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட தீவிபத்தால், அந்த அறையிலிருந்தவர்களில் 4 பேருக்கு 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உடலில் ஒரு சில இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 2 இளம்பெண்களும் அடங்குவர். முகத்தில் தீக்காயம் அடைந்தவர்களு க்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. உயிருக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது’

என்று கூறி உள்ளனர்.