டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தி.மு.க அரசே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறினார். அப்போது, “பொய் பொய், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்” என்று திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், “யார் பொய் பேசுவது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று ஆவேசமாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். அவர்களை பார்த்து பேசிய நிர்மலா சீதாராமன், “நான் இன்னும் தமிழ்நாடு பற்றி நிறைய பேசவேண்டி இருக்கிறது. ஆகவே, ஓடாதீங்க நில்லுங்க. அப்படியே வெளியே போனாலும், தொலைக்காட்சியில் கண்டிப்பாக பாருங்கள்” என்று உரத்த குரலில் கூறினார்.
அதுபோல திமுக எம்.பி. கனிமொழி பேசியதற்கு பதில் தெரிவித்தபோது, தமிழ்நாட்டு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை இழுத்தவர்கள்தான் திமுகவினர், இவர்கள் திரௌபதி பற்றி பேசுவதா? என்று ஆவேசமாக கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் விவகாரத்தை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் முடக்கிய நிலையில், மத்திய பாஜக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த தீர்மானத்தின் மீது முதல் 2 நாட்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் பேசினர்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய (கடந்த 8-ம் தேதி) தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
இதையடுத்து, நேற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை எய்ம்ஸ் விவகாரம் குறித்து பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக் 1,977 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், ஜப்பானைச் சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் 1,627 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இது மத்திய அரசு திட்டம் என்பதால், இக்கடன் தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கும். தமிழக அரசுக்கு எந்த கடன் சுமையும் இல்லை. ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தி.மு.க.வினர் பொய்யான தகவலைப் பரப்ப வேண்டாம்.
அதேபோல, பொதுவாக எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் 750 படுக்கை வசதிகள் மட்டுமே இருக்கும். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கை வசதிகள் இருக்கும். இங்கு தொற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வார்டுகள் கட்டப்படுவதால், கூடுதலாக 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 99 மாணவர்கள் படிக்கிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவே, கட்டுமானப் பணியைக் குறிப்பிட்ட காலத்தில் தொடங்க முடியாமல் போனது” என்று கூறினார். அப்போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், “பொய் பொய், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்” என்று கோஷமிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், “யார் பொய் பேசுவது. வெட்கமாக இல்லையா” என்று ஆவேசமாகக் கூறினார். உடனே, தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். எனினும் விடாத நிர்மலா சீதாராமன், “நான் இன்னும் தமிழ்நாடு பற்றி நிறைய பேசவேண்டி இருக்கிறது. ஆகவே, ஓடாதீங்க நில்லுங்க. அப்படியே வெளியே போனாலும், தொலைக்காட்சியில் கண்டிப்பாக பாருங்கள்” என்று உரத்த குரலில் கூறினார்.
அதுபோல திமுக எம்.பி. கனிமொழி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசும்போது, மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை என்றுஆவேசமாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மலா சீத்தராமன், திரௌபதி பற்றி பேசியிருக்கிறார்கள்.. ஒரு பெண்ணாக இதை நான் சொல்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. திரௌபதியின் புடவை துகிலுரியப்பட்டதைப் பற்றி பேசியிருக்கிறார் திமுக எம்.பி.
தமிழ்நாட்டு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை இழுத்தவர்கள்தான் திமுகவினர் என்று ஆவேசமாக பேசினார் நிர்மலா சீதாராமன். 1989 மார்ச் 25ஆம் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக. அப்போது சட்டசபையில் அவரது புடவை கலைந்து, தலை கலைந்து நின்று கொண்டிருந்த போது அதைப்பார்த்து சிரித்தவர்கள்தான் திமுகவினர். அப்போது ஜெயலலிதா ஒரு சபதம் போட்டார். இனி நான் இந்த சட்டசபைக்கு வர மாட்டேன். அப்படி சட்டசபைக்குள் நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்று சபதம் போட்ட ஜெயலலிதா தனது சபதத்தில் ஜெயித்தார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். சட்டசபையில் அன்று ஜெயலலிதாவின் புடவையை இழுத்து துகிலுரித்தவர்கள் இன்றைக்கு திரௌபதியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தபோது, எப்போதும்போல அதற்கு பதில் கூறாமல், திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.