டில்லி

நாடாளுமன்றத்துக்குப் பிரதமர் மோடி வந்ததே தங்களுக்கு வெற்றி என திமுக எம் பி டி ஆர் பாலு கூறி உள்ளார்.

நேற்று டில்லியில் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது டி ஆர் பாலு,

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. சுமார் 2 மணி நேரம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மணிப்பூர், அரியானா சம்பவங்கள் பற்றிக் கவலைப்படவே இல்லை.  நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்றுப்போவோம் என்று தெரியும். ஆயினும் பிரதமரை அவைக்கு வரவைக்க வேறு வழியில்லை என்றுதான் அதைக் கொண்டுவந்தோம்.

அவர் மணிப்பூர் பற்றியோ, அரியானா பற்றியோ பேசாததால் வெளிநடப்பு செய்தோம். நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்து எடுப்பதில் மாற்றம் கொண்டு வருவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  ஏற்கனவே கொண்டுவந்த டெல்லி அரசு சட்டத்தை நிறைவேற்றி விட்டனர்.

ஆளுங்கட்சி அதிகார போதையில் செயல்பட்டு வருவதைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அவர்களுக்கு அதிகார பலத்தை மக்கள் கொடுத்து உள்ளனர்.  எங்களுக்குப் பிரதமர் அவைக்கு வந்ததே பெரிய வெற்றிதான்.

ஏற்கனவே கச்சத்தீவு பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் பலமுறை பேசி இது தொடர்பான முதல்வரின் கடிதங்களைக் கொடுத்து இருக்கிறேன்.  பாஜகவினர் காங்கிரசார் கச்சத்தீவைக் கொடுத்தார்கள் எனத் தெரிவிக்கிறார்கள். என்றைக்கும் கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம். அதை நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டம் இயற்றி கொடுக்கப்படவில்லை.”

என்று தெரிவித்துள்ளார்.