புதுடெல்லி:
கண்ணகியின் கோபத்தால் பாண்டியன் செங்க்க்கோல் உடைந்த கதை தெரியுமா? என்று மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி, மணிப்பூரில் இரட்டை இன்ஜின் அரசு இரட்டை சீரழிவை பேரழிவை ஏற்படுத்தி மக்களை கொல்லும் அரசாக மாறிவிட்டது. மணிப்பூர் முதல்வர் வன்முறையை கட்டுப்படுத்தாமல் நடுநிலை வகிப்பதாக சொன்னார். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை உட்பட ராணுவம் குவிக்கப்பட்டும் பயன் இல்லை.
மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாண ஊர்வலமாக நடத்தப்பட்டும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. அடைக்கலம் கோரிய பெண்களுக்கு மணிப்பூர் போலீஸ் பாதுகாப்பு தராமல் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு போனது. மணிப்பூர் விவகாரத்தில் பெண்கள் ஆணையங்கள் அனைத்தும் அமைதி காக்கின்றன.
மணிப்பூர் நிலவரம் குறித்து இன்னமும் மத்திய அரசு மவுனம் காக்கிறது.
மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை. மணிப்பூர் மக்களை பிரதமர் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை.
மணிப்பூர் அகதி முகாம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மோசமாக உள்ளன. குக்கி,நாகா மக்கள் மீது மணிப்பூர் முதல்வர் குற்றம் சாட்டுகிறார்; முன்னாள் அதிகாரிகளோ மணிப்பூர் முதல்வர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
பாண்டியன் செங்கோல் நீதி வழங்கிய கதை உங்களுக்கு தெரியாது. கண்ணகி கதை உங்களுக்கு தெரியாது. நீங்கள்தான் சோழர் செங்கோல் என விழா எடுத்தவர்கள் என கனிமொழி எம்பி ஆவேசமாக பேசினார்.