சென்னை
நேற்று 2 ஆம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதிக்கக்கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி முன்னிறுத்தப்பட்டார். நீதிபதி அவரை 12-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்குச் சென்று மத்திய காவல்துறை பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி யை நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் அங்குள்ள 3-வது மாடியில் செயல்படும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரவு 10 மணியளவில் விசாரணை தொடங்கியது.
அவரிடம் முதல் நாள் விசாரணையில் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார், உதவியாளர் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதற்கு விளக்கம் கேட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்தவுடன் அவரை நன்றாகத் தூங்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் செந்தில் பாலாஜி தூங்கி எழுந்தார். அவருக்கு வீட்டிலிருந்து அவருக்கு மாற்றுத்துணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழக்கறிஞர் ஒருவர் கொண்டு வந்தார்.
அவரை அலுவலகத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் அவர் வைத்திருந்த பொருட்களைக் காவலர்கள் வாங்கிக் கொண்டனர்.
வழக்கம்போல் செந்தில் பாலாஜிக்கு டீ கொடுக்கப்பட்டு காலை 9 மணியளவில் அவருக்கு டிபன் வழங்கப்பட்டு அவரிடம் 2-வது நாள் விசாரணை தொடங்கியது. அதற்கு முன்பு அவரது உடல்நிலையைச் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர். மருத்துவர்கள் குழுவினர் அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.
நேற்றும் செந்தில் பாலாஜியிடம் நேற்றும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவரும் முறையாக பதில் அளித்ததாக தெரிகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை விவரங்களை ‘வீடியோ’ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி உற்சாகம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டதாகக் கூறப்படுகிறது..
அமைச்சருக்கு மதிய உணவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஓட்டலில் இருந்து வரவழைத்துக் கொடுத்தார்கள். இரவு வரை அவரிடம் விசாரணை நீடித்தது. விசாரணையின் போது செந்தில் பாலாஜியைப் பார்ப்பதற்கு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரைப் பார்க்க வரும் வழக்கறிஞர்களும் சாஸ்திரிபவன் அலுவலக நுழைவு வாயிலையே நிறுத்தப்பட்டனர்.
சாஸ் திரி பவனில் துப்பாக்கி ஏந்திய மத்திய காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.