டில்லி
ராகுல் காந்தி ஏற்கனவே வசித்து வந்த துக்ளக் லேன் பங்களாவுக்கு மீண்டும் குடி புக உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதையொட்டி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் டில்லியில் அவர் வசித்து வந்த துக்ளக் லேன் பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி அந்த பங்களாவை காலி செய்தார்.
தற்போது உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஒத்தி வைத்துள்ளது., எனவே அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டு அவர் மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மத்திய அரசு ராகுல் காந்திக்கு ஏற்கனவே அவர் வசித்த துக்ளக் லேன் பங்களாவை மீண்டும் ஒதுக்கி உள்ளது. இதையொட்டி விரைவில் அவர் மீண்டும் தனது பழைய இல்லத்துக்குக் குடி புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இல்லத்தில் ராகுல் காந்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து ராகுல் காந்தி “இந்தியா மொத்தமும் எனது இல்லம் தான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.