மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு செயல்படும் விதம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என்றும் பெண்கள் மற்றும் அம்மாநில மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விளக்கமும் அளிக்காததை அடுத்து மோடியின் பதிலை எதிர்பார்த்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
இன்று பிற்பகல் துவங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 12 மணி நேரம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வினருக்கு 7 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகோய் துவங்கினார். ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவுரவ் கோகோய் பேசியது ஆளும் பாஜக உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி “11:55 க்கு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் ராகுல் காந்தி பேசுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் 5 நிமிடத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த கவுரவ் கோகோய் “பிரதமர் மோடி கூட சபாநாயகரை சந்தித்து பேசினார் அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லையே” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.
அப்போது நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அரசுத் தொலைகாட்சி சேனலான சன்சாத் டி.வி.யில் மக்களவையில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மான காட்சிகளுக்கு இடையே பாஜக அரசின் சாதனைகளை கூறும் எழுத்து வடிவிலான செய்திகளை கீழே ஒளிபரப்பினர்.
வழக்கத்திற்கு மாறான இந்த ஒளிபரப்பு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து அதை நிறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது ராகுல் காந்தி பேசுவார் என்பதை எதிர்பார்த்து மத்திய பாஜக அரசு இதுபோன்ற அநாகரீகமான வேலைகளில் இறங்கியதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினார்.
மேலும், அவையில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்து ஒளிபரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்தினார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.