டில்லி

நாடெங்கும் 508 ரயில் நிலையங்களில் நடைபெற உள்ள சீரமைப்பு பணிகளுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

நாடெங்கும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலையங்கள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இதன்கீழ் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இந்த ரயில் நிலையங்கள் புதுப்பொலிவும் பெற போகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. இன்று இந்த பணிகளைத் தொடங்கி வைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.  இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 25 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாகத் தமிழகத்தில் செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், நாகர் கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.