சென்னை: ராமாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆடி மாத கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவினரின் இதுபோன்ற அநாகரிக சம்பவங்கள் தொடர்வது பெண் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி (2023) மாதம் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் விமர்சனங்களுக்கு பிறகு, 2 திமுக இளைஞரணி நிர்வாகிகள், கைது செய்யப்பட்டகர். இந்த நிலையில், தற்போது, கோவில் திருவிழா பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசிடம் பாலியல் சேட்டை செய்த அந்த பகுதி திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். திமுகவினரின் பாலியல் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது.
ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதுபோல சென்னை ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 5ந்தேதி) ஆடி வெள்ளியை முன்னிட்டு இரவு கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதற்காக ராமாபுரம் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவிழாவிற்கு வந்திருந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதுடைய பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், அவரை தடுத்த நிலையில், மீண்டும் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கிருந்து அகன்ற பெண் காவலர், இதுகுறித்து, உதவி ஆய்வாளர் கோபால் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த நபரை பிடித்து இழுத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் கண்ணன் என்பதும், மெக்கானிக் வேலை செய்பவர் என்பதுடன், அவர் திமுக உறுப்பினர் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அந்த பகுதி திமுகவினர் காவல்நிலையத்தில் குவிந்ததுடன், திமுக மாமன்ற உறுப்பினர் ராஜி மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து கண்ணனை கைது செய்யக் கூடாது என காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பயந்துபோன பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் போலீஸ், புகார் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், அங்கு காவல் பணியில் இருந்த த உதவி ஆய்வாளர் சீனிவாசனின் புகாரின் பேரில் திமுக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அவர்மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் சேட்டை செய்த நபருக்கு ஆதரவாக திமுகவினர் வந்து அடாவடி செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கனிமொழி பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த 2 திமுக இளைஞரணி நிர்வாகிகள் கைது!