ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த சம்பளம் மற்றும் படிகள் கணிசமாக உயரும் என சட்டசபையில் அமைக்கப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பான சிறப்புக் குழு தனது அறிக்கையை சபாநாயகர் ரவீந்திரநாத் மஹதோவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த பரிந்துரை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாதச் சம்பளம் மற்றும் ரூ.2.88 லட்சத்துடன் நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் எம்.எல்.ஏ.க்களாக ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் மாறுவார்கள்.

தற்போது தெலுங்கானா எம்எல்ஏக்கள் அதிகபட்சமாக மாதம் ரூ.2.50 லட்சம் பெறுகிறார்கள்.

சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களும் சம்பள உயர்வு திட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றினர். இந்த முன்மொழிவின் அடிப்படையில் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது.

மூத்த பாஜக எம்எல்ஏ ராமச்சந்திர சந்திரவன்ஷி தலைமையிலான குழு, காங்கிரஸின் பிரதீப் யாதவ் மற்றும் தீபிக் பாண்டே சிங், ஜேஎம்எம்-ன் சமீர் குமார் மொஹந்தி மற்றும் பாஜகவின் பானுபிரதாப் ஷாஹி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சம்பள உயர்வு விவகாரத்தில் ஒருமனதாக இருப்பதால், சிறப்புக் குழுவின் அறிக்கை விரைவில் அமல்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

நவம்பர் 15, 2000 ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது ஏழாவது சம்பள உயர்வு ஆகும்.

கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய ரகுவர் தாஸ் ஆட்சியின் போது சம்பள உயர்வு செய்யப்பட்டது. எம்எல்ஏக்களின் சம்பளம் மற்றும் படிகள் 2017ல் சுமார் 33 சதவீதம் உயர்த்தப்பட்டது.

2001ம் ஆண்டு ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சம்பளம் மற்றும் படியாக ரூ.19,800 மட்டுமே பெற்று வந்தனர். இப்போது புதிய அதிகரிப்புக்குப் பிறகு, அவர்கள் 2001 இல் பெற்றதை விட கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகமாகப் பெறுவார்கள்.

டெல்லியில் ஒரு எம்எல்ஏவின் சம்பளம் மற்றும் படிகள் சுமார் ரூ.95,000. டெல்லியின் தனிநபர் வருமானம் ரூ.4.45 லட்சமாகவும், தனிநபர் கடன் ரூ.19,571 ஆகவும் உள்ளது. ஜார்க்கண்டில் தனிநபர் வருமானம் ரூ.91,000 ஆகவும், தனிநபர் கடன் ரூ.30,000 ஆகவும் உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் கூட, ஜார்க்கண்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் டெல்லியை விடவும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை விடவும் முந்தியுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர்களுக்கான வசதிகளை அதிகரிக்கவும் சிறப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அவர்களுக்கு பெரிய குடியிருப்புகள் (எஃப் வகை), ஒரு அவசரகாலச் செயலர், இரண்டு வழக்கமான எழுத்தர்கள், இரண்டு உதவியாளர்கள், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் மாதத்திற்கு 300 லிட்டர் எரிபொருள் வழங்க குழு பரிந்துரைத்துள்ளது.

எம்.எல்.ஏ.,க்களுக்கு, தற்போது, 40,000 ரூபாயாக இருக்கும் மாத சம்பளம், 60,000 ரூபாய் என, கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரைகளின்படி, போக்குவரத்து செலவு மாதத்திற்கு 3,000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. பிராந்திய கொடுப்பனவு ரூ.65,000 ல் இருந்து ரூ.80,000 ஆகிறது.

ஸ்டேஷனரிக்கு மாதம் ரூ.10,000 வழங்கவும் குழு பரிந்துரைத்தது; தினசரி உதவித்தொகை மாநிலத்தின் உள்ளே ரூ.2,000 மற்றும் மாநிலத்திற்கு வெளியே ரூ.2,500;

தொலைபேசி, அலைபேசி, இணையம் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்;

உபகரணங்கள் மற்றும் தங்குமிடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம்;

ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்துக்கு ரூ.60,000 க்கான கூப்பன்;

செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளுக்கான கொடுப்பனவு மாதம் ரூ. 3,000 (தற்போது ரூ. 2,000);

தனிப்பட்ட உதவிக்கு மாதம் ரூ.15,000; கணினி மற்றும் மடிக்கணினிக்கு ரூ.1 லட்சம்; மற்றும் தனி உதவியாளருக்கு மாதம் ரூ.50,000.

தவிர, 20 லட்சம் ரூபாய் வரை கார் கடனும், 40 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடனும் 4 சதவீத வட்டியில் வழங்க குழு பரிந்துரைத்துள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் வருமான வரியை மாநில அரசு செலுத்த வேண்டும், டெல்லி ஜார்கண்ட் பவனில் ஒரு நாளைக்கு ரூ. 100 வாடகைக்கு ஒரு அறை, ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இணையான மருத்துவக் கொடுப்பனவு மற்றும் மாநில அரசின் விதிகளின்படி தங்கும் வசதி உள்ளிட்ட பல சலுகைகளை குழு பரிந்துரைத்துள்ளது.