சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் என் எல் சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
என்.எல்.சி, தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு அவசர வழக்காக நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பயிர்களைச் சேதப்படுத்திய என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்காமல், விசாரணையைத் தள்ளிவைத்தார்.
நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது சூழ்நிலை மாறியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு என்.எல்.சி., தரப்பில் ஆஜரான வழக்குறைஞர் நித்தியானந்தம், ‘முன்பைவிட தற்போது சூழ்நிலை கடும் மோசமாக உள்ளது. பெண் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுக்கும் விதமாக அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர். அதுவும் குழந்தைகள், பெண்களைக் கொண்டு இந்த செயலை செய்கின்றனர்” என்றார்.
நீதிபதி, “என்.எல்.சி. மூடிவிட்டால், ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்குமா? அங்குள்ளவர்கள் என்ன செய்வார்கள்? இதுபோன்ற செயலை அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.
ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜி.சங்கரன், “இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. என்.எல்.சி. வழக்குரைஞர் மிகைப்படுத்திக் கூறுகிறார்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்.எல்.சி., வழக்குரைஞர், போராட்டக்காரர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. இந்த போராட்டக்காரர்களால், வேலை தடைப்படுகிறது” என்றார்.
நீதிபதி தமது உத்தரவில்,
“என்.எல்.சி., தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடத்த ஒரு இடத்தை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தேர்வு செய்ய வேண்டும். என்.என்.சி., தலைமை கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும்’
என்று உத்தரவிட்டுள்ளார்..