காஞ்சிபுரம்: மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் வைப்பதற்கு பதிலாக, டீ, காபி வழங்கப்படும் காகித கப் கொண்டு சுவாச சிகிச்சை அளித்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து,  இந்த தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா்  அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னால் பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுவன்  உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளான். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடனடியாக சிறுவனுக்கு ஆக்சிஜன் சுவாசம் வழங்க செவிலியர்களுக்கு  அறிவுறுத்தினார்.

ஆனால் அங்கு பணியாற்றி வரும் ம் செவிலியர்கள், ஆக்சிஜன் செலுத்தும் முகக் கவசம் இல்லாததால், டீ குடிக்கும் பேப்பர் கப்பினை எடுத்து முகக்கவசமாக பயன்படுத்தி அலட்சியமாக ஆக்சிஜனை செலுத்தி உள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிறுவனின் உயிரோடு விளையாடிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வலிறுத்தினர். இதைடுத்து,  அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், மருத்துவத்துறை அதிகாரிகள், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உத்திரமேரூா் அரசு மருத்துவமனை விவகாரம் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநா் விஸ்வநாதன் அந்த மருத்துவமனைக்கு கடந்த 1-ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினாா். அந்த சம்பவம் நடந்த ஜூலை 27-ஆம் தேதி காலை புறநோயாளிகள் பிரிவில் நிகழ்ந்துள்ளது. 11 வயதான நேசன் என்ற சிறுவனுக்கு லேசான சுவாசத் தடை பாதிப்பு இருந்ததால், அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளாா். அங்கு நெப்ளேசன் எனப்படும் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கும் போது, தனது மகனுக்கு வேறு நோயாளிக்கு வைத்த முகக்கவசத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய அவரது தந்தை, தான் வைத்திருந்த காகித கப்பை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க தெரிவித்துள்ளாா். அதன்பேரிலேயே, செவிலியா் அவ்வாறு சிகிச்சை அளித்துள்ளாா்.

எனினும், காகித கப் பயன்படுத்தியது தவறானது. விசாரணையின் அடிப்படையில், கவனக்குறைவாக செயல்பட்டவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அதுபோல, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வெளியில் சென்று எடுக்க வலியுறுத்தப்படுவதாக செய்தி வந்துள்ளது. இதுபற்றி மருத்துவமனை முதல்வரிடம் கேட்ட போது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி ஸ்கேன் எடுக்கும் வசதிகளும், குழந்தைகளுக்கான சீமாங் பிரிவில் தனி ஸ்கேன் எடுக்கும் வசதிகளும் உள்ளதாகவும், தினமும் 250 ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தாா். ஆனாலும், ஸ்கேன் எடுக்காமல் விடுபட்டவா்கள் யாராவது இருக்கிறாா்களா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.