சென்னை

திமுக இளைஞரணிக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். .

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இளைஞர் அணி சார்பில் அவருக்கு இந்தியத் தேசிய சின்னம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.  இக்கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ்.சீனிவாசன், க.பிரபு, ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்

”வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழியை அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற வங்கி பணியாளர் தேர்வு கழகத்தின் நடைமுறையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டியும், தமிழ்நாட்டில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தபால் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசுப் பணிகளை, தமிழருக்கே வழங்க வேண்டும்”

என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.