மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று வன்புணர்வு செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கணவர் முன்னாள் ராணுவ வீரர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சுரசாந்த்பூர் என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்கி இருக்கும் இந்த குடும்பத்தை சந்தித்து விவரங்களை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய 65 வயதான அந்த ராணுவ வீரர், தான் அசாம் படை பிரிவில் சுபேதாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும், ராணுவத்தில் பணிபுரிந்த போது இலங்கை மற்றும் கார்கில் போன்ற இடங்களில் போர் புரிந்ததிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், இதுபோல் மனித மிருகங்களுக்கு இடையே வாழ்வது போர்க்களத்தை விட மோசமானது என்று அவர் வர்ணித்துள்ளார்.

ஆயிரக்கணக்கனோர் சூழ்ந்துகொண்டு துப்பாக்கி முனையில் ஆடைகளை களையச் செய்து எனது மனைவியிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டதை அடுத்து எனது மனைவி மிகுந்த மனஉலைச்சலில் இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

 

மே 4 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானதை அடுத்து மணிப்பூரில் வன்முறை நடந்துவருவதை தெரிந்துகொண்ட மத்திய மாநில அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டியது.

அதேவேளையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இரண்டு மாதங்களாக மணிப்பூரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை முக்கிய குற்றவாளியாக கைது செய்துள்ளது மணிப்பூர் காவல்துறை.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், 1000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் எந்த வழக்கை முதலில் விசாரிப்பது என்பது புரியாமல் காவல்துறை கடந்த 2 மாதங்களாக திணறி வந்ததை அடுத்து வீடியோ வெளியான இந்த சம்பவம் குறித்து விரைந்து விசாரிக்க தான் உத்தரவிட்டிருந்ததாக செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்த தகவல் வெளியானதை அடுத்து இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களாக சிறுபான்மையினர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்றும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.