புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சாலையை அமைச்சர்கள் நடந்தே ஆய்வு செய்தனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ததுடன், அந்த பகுதியில் இயங்கி வந்த தனியார் மனநல காப்பத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
மக்களின் உடல்நலதை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டந்தோறும், 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். மேலும், இந்த நடைபாதையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நோக்கில் நடை பயிற்சி மேற்கொள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் பொதுமக்கள் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நடந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு நடை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சு. அங்குள்ள அரசு மருத்துவமனையைஆய்வு செய்தார். தொடர்ந்து அன்னவாசல் வட்டார அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ததுடன் அந்த வளாகத்தில் தனியாா் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள மனநலக் காப்பகத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.
பின்னர் செய்தியாளா்களை சந்தித்தபோது, இங்குள்ள மனநலக் காப்பகம் வெறும் 3 சிறிய அறைகளைக் கொண்டுள்ளது. இதில், , சுமாா் 59 பெண்களை வைத்திருக்கின்றனர். ஓா் அறையில் 3 போ் தங்க வைக்கப்படலாம் என்ற நிலையில் 15 பேருக்கும் மேலாக ஒவ்வோா் அறையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனா். சுகாதாரமும் பேணப்படவில்லை. உணவும் சரிவர வழங்காததாக அங்கிருந்தோா் தெரிவித்தனா்.
இதையடுத்து இந்த இல்லத்தை ஆய்வு செய்திருக்க வேண்டிய ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கே. ராமுவை பணியிடை நீக்கம் செய்யவும், தலைமை மருத்துவ அலுவலா் சரவணனை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்தத் தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்.
மருத்துவப் பணிகள் இயக்குநா் மற்றும் மனநலத் திட்ட இயக்குநா் ஆகியோா் இரவே புறப்பட்டு புதுக்கோட்டை வருகின்றனா். இங்குள்ள 59 பேரையும் பாதுகாப்பாக அரசு மருத்துவக் கல்லூரியில் தங்க வைக்கவும், மாவட்டத்திலுள்ள இதர காப்பகங்களை ஆய்வு செய்யவும் அவா்கள் நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா்.