சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதவரம் முதல் சிப்காட் சிறுசேரி வரையிலான ரயில் நிலையங்கள் அமைக்க 1,204.87 கோடியில் டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின், 3ம் வழித்தடத்திற்கான ரயில் நிலையங்கள் அமைக்க டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது! 3வது வழித்தடமான மாதவரம் முதல் சிப்காட் சிறுசேரி வரையிலான ரயில் நிலையங்கள் ரூ. 1,204.87 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் கெல்லிஸ் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர். ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே சுரங்கப்பாதை), மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.