டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க காங்கிரஸ் தலைமையில் 24 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக பெங்களூருவில் நடைபெறுகிறது. அதுபோல, டெல்லியில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், 38 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வரும் நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளைக் கொண்ட கூட்டணியும் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் எதிா்க்கட்சிகளின் 2 நாள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்  நேற்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாளாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மீண்டும்  பெரும்பான்மை பலத்துடன் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், தனது கூட்டணி கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் இணைக்கவும், புதிய கட்சிகளை வரவேற்கவும் பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிா்தரப்பை வலுவிழக்கச் செய்யும் வியூகங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களில் மதம், ஜாதி ரீதியிலான சிறிய கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் உள்ள நிலையில், அக்கட்சிகளையும் பாஜக முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு பிறகு, பாஜக கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் விலகின. இந்த இழப்பைச் சரிகட்டும் வகையில், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி, ஓம் பிரகாஷ் ராஜ்பா் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகிய கட்சிகளுடன் பாஜக கைகோத்துள்ளது. மேலும், புதிய வரவாக வந்துள்ள கட்சிகளுக்கும், அதிமுக (தமிழகம்), ஜனசேனா (ஆந்திரம்) மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு பிராந்திய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.