gokul-yuvaraj

ன்று தமிழக்ததின் “மோஸ்ட் வான்டட் பர்சன், “ மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை”யின் தலைவர் யுவராஜ்தான். தலித் இளைஞர் கோகுல்ராஜ் வழக்கில், போலீசாரால் அதி தீவிரமாகத் தேடப்படுவர். காவல்துறை மட்டுமின்ற, அவரது ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒட்டு மொத்த தமிழகத்துக்கும், “யுவராஜ் எங்கே?” என்பதுதான் கேள்வி.

“சுருக்”காக ப்ளாஷ்பேக்.. ..

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஜூன் மாதம்24-ம் தேதி கிழக்கு தொட்டிபாளையத்தில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

“பறையர் இனத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கவுண்டர் இனத்தைச் சேர்ந்த ஸ்வாதியை காதலித்ததால் கொல்லப்பட்டார்” என்று தகவல் பரவியது. கோகுல்ராஜின் உறவினர்களும், சில அமைப்புகளும் “இதை கொலை வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று போராட்டம் நடத்தியதோடு, உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.

இதையடுத்து, மர்ம மரணம் என்று பதியப்பட்டதை, கொலைவழக்காக மாற்றி விசாரணையைத் துவக்கியது காவல்துறை. “ மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலைவர் யுவராஜ் உள்ளிட்ட ஒன்பது பேரை குற்றவாளிகள் என்று தீர்மானித்து தேடத்துவங்கியது. அவர்களில் ஆறுபேரை கைது செய்யப்பட.. ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். \ யுவராஜ் உட்பட இருவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்கள்.

இதற்கிடையே “கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியில் யுவராஜ் கைது செய்யப்பட்டார்” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் எந்த கோர்ட்டிலும் யுவராஜ் ஆஜர்படுத்தப்படாததால், அவர், கைது செய்யப்பட்டாரா, அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்ற சஸ்பென்ஸ் நீடித்தது. .

இந்த நிலையில், – ஒரு இடைவேளைக்குப் பிறகு – தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிந்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் யுவராஜ். கடந்த 25ம் தேதி, இரவு பதியப்பட்ட அந்த அறிக்கையில், “வரும் ஆடி பதினெட்டாம் தேதி, நமது கவுண்டர் சமுதாயத்தின் வழிகாட்டி தீரன் சின்னமலையின் 210 ம் ஆண்டு வீரவணக்க நாள் . அன்று சங்ககிரி நினைவு தூண் அமைவிடத்தில் நமது அமைப்பினர் அனைவரும் வந்து வீரவணக்கம் செலுத்த வேண்டும் “ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் , “காலச்சூழ்நிலையின் காரணமாக இந்த நிகழ்வில் நாம் இணைந்து வீரவணக்கம் செலுத்திட இயலாத நிலை “ என்று அவர் குறிப்பிட்டுள்ளதும் பரபரப்பை அதிகரித்துள்ளது. “காவல்துறை வசம் யுவராஜ் இல்லை என்பதும் தலைமறைவாகவே இருக்கிறார் என்பதும் உறுதியாகிறது” என்று அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

காவல்துறை வசம் யுவராஜ் இல்லை என்பது உறுதியாகிவிட்டாலும், எங்கே இருக்கிறார் என்று தெரியாததால் சஸ்பென்ஸ் தொடர்கிறது.

இந்த நிலையில், நமது patrikai.com இதழ் சார்பாக யுவராஜிடம் சில கேள்விகளை வைத்தோம்.

gokul-yuvaraj1

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறீர்கள்… பிறகு ஏன் காவல்துறை உங்களை குற்றவாளி என்கிறது… ?

அந்த கொலைக்கும் எனக்கோ எங்கள் அமைப்புக்கே எந்தவித தொடர்பும் கிடையாது. என்னையும் எனது பேரவையையும் முடக்க சிலர் சதி செய்கிறார்கள். அதற்காக கோகுல்ராஜ் கொலையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்கள்.

காதல் கலப்புத் திருமணம் பற்றி உங்கள் கருத்து என்ன?

இரு குடும்பங்களும் மனதார ஏற்றுக்கொண்ட நிலையில் கலப்புத்திருமணம் நடந்தால், யாருக்கும் பிரச்சனை இல்லை.

கோகுல்ராஜ் மரணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

எவ்வளவு பெரிய தவறு செய்தவனுக்கும் மரண தண்டனை கொடுப்பது எப்போதுமே தீர்வாகாது.

மேலும் சில கேள்விகளை முன்வைத்தபோது, “மன்னியுங்கள்… விரைவில் விரிவாக பேசலாம்” என்று முடித்துக்கொண்டார்.

– டி.வி.எஸ். சோமு https://www.facebook.com/reportersomu?fref=ufi