விழுப்புரம்: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அமைச்சர்கள் பலர்மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதில் பல குற்றச்சாட்டுக்களில் ஆதாரம் இல்லை என நீதிமன்றம் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து வருகிறது. ஆனால், சில வழக்குகள் ரத்து செய்ய முடியாது என்று சில நீதிபதிகள் கறாறாக உள்ளனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுதான பல்வேறு ஊழல் புகார்களைத் தொடர்ந்து, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜூன் 13-ஆம் தேதி சென்னையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, அவரை கைது செய்தது. உடனே அவர் தனக்கு நெஞ்சுவலி என கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல இடங்களில், அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினர் உதவியுடன் இந்த சோதனைகள் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்பியுமான கெளதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். கெளதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை வளையத்திற்குள் வந்த இரண்டாவது அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.