பீகார் மாநிலத்தில் அதிக அளவு மோமோக்களை யார் சாப்பிடுவது என்று நண்பர்களுக்குள் நடைபெற்ற போட்டியில் 23 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தவே தொகுதிக்கு உட்பட்ட சிஹோர்வா கிராமத்தில் வசிக்கும் விபின் குமார் பாஸ்வான், சிவான் மாவட்டத்தில் உள்ள கியானி மோர் என்ற இடத்தில் மொபைல் போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார்.
வியாழன் அன்று வழக்கம் போல் அவரது கடைக்கு வந்த நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள கடைக்கு சென்று மோமோ சாப்பிட்டுள்ளனர்.
அப்போது நண்பர்களுக்கும் அதிக அளவு மோமோ-க்களை யார் சாப்பிடுவது என்று 1,000 ரூபாய் பந்தயம் கட்டப்பட்டது. 150 மோமோக்களை சாப்பிட்ட விபின் குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
முதலில் தங்களை ஏமாற்றுவதாக நினைத்த அவரது நண்பர்கள் பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து செய்வதறியாது விபினின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. விபின் உடல் சாலையில் அனாதையாக இருப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் வந்து விபின் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விபின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வரும் நிலையில் அவர் கடை வைத்திருப்பது சிவான் மாவட்டம் என்பதால் இருமாவட்ட போலீசார் இடையே யார் இந்த வழக்கை விசாரிப்பது என்று குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து கோபால்கஞ்ச், தவே காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், விபினின் நண்பர்கள் அவருக்கு வேண்டுமென்றே விஷம் கலந்த உணவை சாப்பிட கொடுத்துள்ளனர் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.