தென்காசி: நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  நேற்று எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  தென்காசி தொகுதியில்  18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டது. வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த பழனி நாடார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டிய;ன போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளரரை  விட, காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார்  370 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததாக  குற்றம் சாட்டினார்.  பின்னர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, தென்காசி தொகுதி தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட கோட்டாட்சியர் லாவண்யா அறிவித்தார்.  வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் மட்டும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று காலை கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் சிலர் சலசலப்பு ஏற்படுத்தினர். இதனால்,  சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் மீண்டும் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும், வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக அதிமுக வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு வந்ததையடுத்தும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் எண்ணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை வெளியானது. அதில்,  காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பழனி நாடாருக்கு 1606 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 673 தபால் வாக்குகளும் கிடைத்தன. இதனால், 370 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிநாடார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.