சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2வது கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் செல்கிறார்.
கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் ஆட்சி, மேகதாதுவில் அணை கட்டுவோம் என்றும், காவிரி நீரை திறந்து விட மாட்டோம் என்று கூறி வருகிறது. இது தமிழக கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஆளும் கட்சியான திமுகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக உள்பட தமிழக எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி, திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தமிழநாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக இதுதொடர்பாக வாய் திறக்க மறுத்து விடுவதாக குற்றம் சாட்டியதுடன், கர்நாடக மாநில அரசுடன் மேகதாது, காவிரி பிரச்சனை இருப்பதை, சரி செய்யாமல், பெங்களூருவில் நடைபெற இருக்கும் அனைத்து எதிர்கட்சிக் கூட்டத்திற்கு மட்டும் பெங்களூர் செல்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்துயிட்டனர். அதேபோல் காவிரி நதிநீரை நிறுத்திவிடுவோம் என கர்நாடகா கூறி வருகிறது. இதை கண்டிக்காமல் முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு சென்று வந்தால், பாஜகவினர் கருப்பு பலூன் பறக்க விடுவோம் என எச்சரிக்கை செய்திருந்தார்.
ஆனால், தமிழக முதலமைச்சர் பாஜகவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், பெங்களூருவில், காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெற இருக்கும் 2 நாள் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளார். இதற்காக வரும் 17ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஜூலை 17, 18ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களின் முதல்கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற நிலையில், ‘டிவிட்டர்’ பக்கத்தில், ‘#GoBackStalin’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. தற்போது, தமிழ்நாடு கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் சூடுபிடித்துள்ள மீண்டும் #GoBackStalin’ என்ற ஹேஷ்டேக்கை பாஜக வைரலாக்குமோ என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் 17ந்தேதி பெங்களூரு வர வேண்டும்! மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு…