பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையான 7வது முறையாக இன்று மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் 10ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக முன்னாள் முதல்வரான சித்தராமையா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வரானார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாநில பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் 2013 முதல் 2018 வரை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்வராக இருந்தபோது 6 பட்ஜெட்களை தாக்கல் செய்த சித்தராமையா, இன்று முதலமைச்சராக ஏழாவது பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.