பாலசோர்
ஒடிசாவில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜூன் 2 அன்று ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்திய ரயில்வே வரலாற்றில் இது மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக சிக்கல் கொடுப்பதில் ஏற்பட்ட குறைபாடு, அதி வேகமாக ரயில்கள் இயக்கப்பட்டதே ரயில் விபத்துக்குக் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியது. ஜூன் 5 அன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே ஜூன் 5 ஆம் தேதி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.
ரயில்வே அமைச்சர் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்குக் காரணம். ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என விளக்கம் அளித்திருந்தார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..
விபத்துக்குத் தவறான சிக்னலே காரணம் என்பது தெரியவந்துள்ளது. சிக்னல் தவறாகக் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றம் செய்த பிறகும் அதிகாரிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சிக்னல் துறை மட்டுமின்றி, பிறரும் இச்சம்பவத்தில் அலட்சியத்துடன் நடந்துகொண்டது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு எதிராக ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகள் இது குறித்து,
“தண்டவாளங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் சென்ட்ரல் வரைபடத்தில் அப்டேட் ஆகவில்லை. வருடாந்திர ஆய்விலும் இது குறித்து அவர்கள் எச்சரிக்கவில்லை. எனவே இது ஒரு நபரின் தவறு அல்ல குறைந்தது ஐந்து பேர் இதற்குக் காரணமாக இருக்கலாம்”
என்று தெரிவித்துள்ளனர்.