உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு தனது பார்ச்யூனர் காரில் சொந்த ஊரான சட்முல்பூர் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்திரசேகர் ஆசாத் மீது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
ஹரியானா மாநில பதிவெண் கொண்ட ஸ்விப்ட் டிசையர் காரில் வந்த மர்மநபர்கள் நான்கு முறை சுட்டதில் ஒரு தோட்டா சந்திரசேகர் ஆசாத்தின் முதுகை கீறியபடி சென்றது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஆசாத் தேவ்பந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
37 வயதாகும் சந்திரசேகர் ஆசாத் இந்தியாவில் வளர்ந்து வரும் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக டைம்ஸ் இதழ் கடந்த 2021 ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
தலித்-பகுஜன் உரிமை ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியான சந்திரசேகர் ஆசாத் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் உரிமைக்காக போராடி வரும் இவர் 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டிருந்தார்.
பின்னர் போட்டியில் இருந்து விலகி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் சிவ்பால் சிங் யாதவ் “இது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆட்சிக்கு எதிரானவர்களை ஒழித்துக்கட்டும் பாஜக-வின் திட்டம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசாத் மீதான இந்த துப்பாக்கிச் சூடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.